
கடந்து சென்றாய் உடைந்து போனேன்
செல்ல பார்வைகள் சீண்டிய போது
தொலைந்து போனேன் தொலைதூர வெறுமைக்குள்
உன்னைக் கண்டதும் உருமாறி போனேன்
எனது கட்டுப்பாடு எல்லாம் இழந்தேன்
வேறொரு பிறவி வேகமாய் எடுத்தேன்
முகவரி இல்லாமல் முழுமையாய் மறைந்தேன்
காற்றில் கரைந்து காணாமல் போனேன்
உடலுக்குள் இல்லாத உணர்வை அடைந்தேன்
உடலுக்கு ஏதோ உண்மையாய் நடப்பதை
வெளியே இருந்து வேடிக்கை பார்த்தேன்
எண்ணம் கொண்டேன் உடனே மறந்தேன்
மீண்டும் தொடர்ந்தேன் மீளமுடியாமல் தவித்தேன்
உறங்க நினைத்தேன் உடனே எழுந்தேன்
நினைவு மறந்து நித்திரையில் விழுந்தேன்
இதயம் துடித்து வேறாய் உணர்ந்தேன்
இரத்தத்தில் நூறு அழுத்தங்கள் அறிந்தேன்
உடம்பில் வெப்பம் உணர்ந்து உறைந்தேன்
வலியை தாங்கும் வழிகள் மறந்தேன்
அப்படியும் என்னை இருக்க விடவில்லை
சொப்பனத்தில் வந்து சொக்குப் பொடிபோட்டு
பித்தனாக என்னை பிதற்ற வைக்கிறாய்
வைத்தியம் தெரியவில்லை பைத்தியம் தெளிய
No comments:
Post a Comment