09 January 2009

அம்மா என்றொரு அழகான தேவதை

நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்
நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்
உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்
எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே
தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்
உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று
சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து
உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்
பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி
முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து
பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று
திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து
படுக்க போகும்வரை பாடு பட்டவளே

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க
படாத பாடுபட்டு பரிதவித்த போதும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து
உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்
விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து
குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

அம்மா என்று அழைத்தாலே போதும்
கவலைகள் எல்லாம் கரைந்து போகும்
கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்
அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்

No comments:

Post a Comment