21 January 2009

பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I

இத பார்ர்த்துட்டு ஏதோ பிரபஞ்சம் போறாங்களாமே! நாமளும் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் எண்டு வந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. என்னட்ட பிரபஞ்சத்த சுத்திக் காட்ட மாயக்கம்பளமும் இல்லை. மந்திரக் கோலும் இல்லை. சும்மா ஒரு நாள் பிபிசி தமிழோசையில விண்வெளி பற்றி தகவல் ஒண்ட கேட்டுட்டு இணையத்துல போய் தேடுனா... பிரமிச்சு போனன். நான் தெரிஞ்சு கொண்ட விஷயங்கள ஒரு பதிவாக்குவமெண்டுதான் இதஎழுத தொடங்கியிருக்கிறன். ஒரு தடவயிலயே முழுவதையும் எழுதுனா...
‘ஒண்ணுமே புரியல, போடா புறம்போக்குன்னு’ போயிட்டே இருப்பீங்க. அதனால கொஞ்சம் நிதானமா, தெளிவா எழுதுவம்னு ஒரு ஐடியா...

இந்தப் பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது, தற்போதய பிரபஞ்சத்தின் நிலையென்ன, எதிர் காலத்தில் பிரபஞ்சம் எப்படியிருக்கும் என்று கேட்டால் யாருக்குமே சரியாகத் தெரியாது. நீண்டகால அவதானிப்புகளின் விளைவாக பிரபஞ்சம் பற்றிய ஒருசில கருத்துருவங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, பிரபஞ்சம் என்பது தட்டையானதாகவே இருக்கவேண்டுமென்றும் அது சுமார் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பெருவெடிப்பு (Big Bang ) ஒன்றின் மூலமாகவே உருவாகியிருக்க வேண்டும் என்றும் அதிலிருந்து தொடர்ச்சியாக விரிவடைந்து செல்கிறது என்றும் கருதப்படுகிறது. எதனால் இந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்பதற்கு இன்றைய விஞ்ஞானத்திடம் எந்தவிதமான விளக்கமும் இல்லை.

இப்பிரபஞ்சமானது 75% கருஞ்சக்தியையும் (Dark Energy), 21% கரும்பொருட்களையும் (Dark Matter), 4% சாதாரண பொருட்களையும் (Normal Matters / Stars, Gas, Rocks, etc) கொண்டதாக இருக்க வேண்டுமெனவும் கருதப்படுகிறது.


2MASS கணிப்பின்படி (Two-Micron All-Sky Survey) பிரபஞ்சம் 1.6 மில்லியன் (Million) நட்சத்திரத் தொகுதிகளை (Galaxies) உள்ளடக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத் தொகுதிகள் ஒவ்வொன்றும் 100-400 பில்லியன் (Billion) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கலாம். இந்த நட்சத்திரத் தொகுதிகள் தமக்குள் சிலபல நட்சத்திரத் தொகுதிகளை சேர்த்துக்கொண்டு கொத்தணிகளாகவே (Clusters) உள்ளன. இக்கொத்தணிகள் 40/50 தொடக்கம் 10,000 வரையான நட்சத்திரத் தொகுதிகளை கொண்டிருக்கலாம். இக்கொத்தணிகளும் தமக்குள் ஒன்று சேர்ந்து விசேட கொத்தணிகளை (Super Clusters) அமைக்கின்றன. இவ்விசேடகொத்தணிகளில் டசின் (Dozen) வரையான கொத்தணிகள் இணைந்திருக்கலாம்.

அதுசரி, தம்மாதுண்டு பூமியிலருந்து இவ்ளோ பெரிய பிரபஞ்சத்தப் பற்றி எப்பிடி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்க எண்டு நீங்க யோசிக்கிறது விளங்குது. ஆரம்பத்துல எதுவுமே தெரியாம இருந்த மனிதன் பின்னால எப்பிடி இதையெல்லாம் படிப்படியா தெரிஞ்சு கொண்டான், நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies) என்றால் என்ன, பால் வீதி (Milky Way) என்றால் என்ன, எப்பிடியான தொலை நோக்கிகளை (Telescopes) இதுக்கு பயன்படுத்துறாங்க, பின்னால பிரபஞ்சத்துக்கு (Universe) என்ன நடக்கலாம் என்ற விடயங்களை இன்னொரு பதிவில சொல்றன்.

No comments:

Post a Comment