28 January 2009

காதல் என்னும் கவிதை சொல்லடி...

நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த சமயம் நடந்த நகைச்சுவையான சம்பவமொன்று... நாங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுச் சுட்டிப்பையனும் அந்த இடத்தில் இருந்தான். எங்கள் செவியில் வந்து விழுந்திருந்த ஒரு காதல் விவகாரத்தைப்பற்றி நாங்கள் மும்முரமாகக் கதைத்துக் கொண்டிருந்தபோது அவனும் ஆர்வமாக வந்து கதை கேட்டான். அவனுடைய ஆர்வத்தைப் பார்த்து விட்டு நண்பனொருவன் நகைச்சுவையாக லவ் (காதல்) என்றால் என்னவென்று தெரியாது. அதுக்குள்ள ஆளப்பார்... என்றதுதான் தாமதம்... அந்தச்சுட்டி சொன்ன பதிலில் நாங்கள் தடுமாறிப் போனோம். எனக்குத் தெரியுமே... லவ்வென்றால் ஒரு அக்காவும் அண்ணாவும் ஒன்றாக போய் ஐஸ்கிறீம் (குளிர்களி) சாப்பிட்டுவிட்டு பாக் (பூங்கா) இற்கும் போய்விட்டு வருவதுதானே... எல்லாம் எங்களுடைய திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விதைத்து விட்டிருக்கிற மாயத்தோற்றங்கள் தானே...

ஒருவர் காதலில் விழுந்துவிட்டால் தன்னைச் சுற்றியுள்ளவற்றின் மீதான அவருடைய பார்வை முற்றிலும் மாறிவிடுகிறது. காதலின் தாக்கம் அவர்களை எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை எழுத்தில் வடிப்பது முடியாத காரியம். அவர்களை மட்டுமா...!!! சுற்றி இருப்பவர்களையும் அல்லவா...! காதல், ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி போன்றது. அந்த அழகான வண்ணத்துப் பூச்சி எப்போது எந்த மலரின் மேல் வந்து அமரும் என்று சொல்லமுடியாது? காதல், ஒரு வானவில் போன்றது. வானவில் எப்படித் திடீரெனத் தோன்றி வர்ணஜாலங்களைக் காட்டி எம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து விடுகிறதோ... காதலும் அப்படித்தான். ஆனாலும் காதலுக்கும் காதலிக்குமொரு உள்ளத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தான் போலும்??? (எங்கேயோ படித்த ஞாபகம்)
காதலுக்கு வேறு சில விளக்கங்களும் இருக்கின்றன. காதல் வெங்காயம் போன்றது... வெளியில் அழகாக இருக்கும். உள்ளே (உரித்து) பார்த்தால் எதுவுமே இருக்காது... கண்ணீரில் தான் கொண்டுபோய் விடும்??? காதல் 'சுயிங்கம்' போன்றது. ஆரம்பத்தில் இனிக்கும். போகப்போக சப்பென்று போய்விடும். காதல் கழட்டிப்போட்ட செருப்பு மாதிரி. அளவாயிருந்தா மாட்டிக்கலாம்... இது ஒவ்வொருவரும் காதலை எப்படி எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவரவர்களுக்கு அது அப்படியே இருக்கும்...
காதல் அமைதியாகவே வருகிறது. அது வரும்போது எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களோ அறிவிப்புக்களோ மின்னல்களோ இல்லாமல்தான் வருகிறது. காதலென்பது இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் கவித்துவமான ஒரு சக்தி... காதல் ஒரு ஈர்ப்பு... அது சத்தியமானது... சுயஒழுக்கமானது... மறுக்க முடியாதது... சுதந்திரமானது... கட்டுப்படுத்த முடியாதது...
காதலினால் எதை அடைய முடியும்??? மகிழ்ச்சி!!! (Happiness), ஆத்ம திருப்தி!!! (Satisfaction of the Soul), அனுபவம்!!! (Experience) இன்னும் சொல்லப் போனால் வலிகள்!!! பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...!!! (Pain) யாரோ ஒருவர் எங்களுக்காக அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்றோ எங்களைபற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றோ நாங்கள் உணர்கிற போது காதல் என்பது நிச்சயமாக ஒரு உன்னதமான உணர்வுதான்... அது இரண்டு ஆத்மாக்களின் முழுமையான ஒன்றிப்பு... காதல் என்பது கொஞ்சமாகமோ அல்லது அதிகமாகவோ எல்லோருக்கும் முக்கியமானது தான்... ஒவ்வொருவருக்கும் தேவையானது காதலே...!!!
காதலில் உங்கள் இணையின் நம்பிக்கைகள், விருப்பு வெறுப்புக்கள் வித்தியாசமான பழக்கவழக்கங்களை மதித்து நடவுங்கள். ஆழமான அர்த்தமுள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்மறையானவற்றைத் தவிர்த்து எப்பொழுதும் இணைந்து பயணிக்க முயற்சி செய்யுங்கள். காதலில் உங்கள் இணையின் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சிக்கு இன்றியமையாதது...
சிலர் காதலில் தோற்று(???) விட்டால், வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது போல் கவலைப்படுகின்றார்கள். உண்மையில் காதலென்பது வாழ்க்கையின் ஒரு அழகான அற்புதமான பகுதி மட்டுமே... காதலே வாழ்க்கையாகிவிடாது. காதலில் தோற்று விட்டோம் என்று கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்து விடுவது, கண்ணாடி பொம்மை உடைந்து விட்டதேயென்று சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் சின்னஞ்சிறிய குழந்தையின் செயலைப் போன்றது... (எங்கேயோ படித்த ஞாபகம்)
சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளிலிருந்து... ஒருமுறை நான் எனது சிறுபராயத்து தோழியைச் சந்தித்தேன். நாங்கள் ஒரு தடாகத்தின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவள் சிறிதளவு நீரை தன்னுடைய உள்ளங்கையில் நிரப்பி அதை எனக்கு முன்பாக நீட்டியபடியே சொன்னாள்... 'எனது கையில் தேங்கியுள்ள நீரை கவனமாகப் பாருங்கள். இது காதலை குறிப்புணர்த்துகிறது... உங்களுடைய கையை அக்கறையுடன் திறந்து வைத்து அதை அங்கேயே இருப்பதற்கு எவ்வளவு நீண்ட காலம் அனுமதிக்கிறீர்களோ, எப்பொழுதும் அது அங்கேயே இருக்கும். ஆனால், உங்கள் விரல்களை முழுவதுமாக மூடி அதை உங்களுடையதாக்க முயன்றீர்களானால், அது தான் கண்டுபிடிக்கிற முதல் இடைவெளியூடாக வெளியேறவே செய்யும்.

பெரும்பாலானவர்கள் காதலில் விடும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள் அதை சொந்தமாக்க முயற்சிக்கிறார்கள். அதிகாரம் செய்ய முயற்சிக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள்... எனவே காதல் உங்களை விட்டு விலகிப் போகிறது... காதல் சுதந்திரமானது... நீங்கள் அதனுடைய இயல்பை மாற்றமுடியாது... உங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமானவர்களாக இருக்க விடுங்கள். அள்ளிக் கொடுங்கள்... எதிர்பார்க்காதீர்கள்... அறிவுரை சொல்லுங்கள்... கட்டளை இடாதீர்கள்... அன்பாய் கேளுங்கள்... அதிகாரம் பண்ணாதீர்கள்...

ஆதலால் நண்பர்களே, காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்...

27 January 2009

பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க III

பிரபஞ்சம் பற்றிய முன்னைய பதிவுகளை பார்ப்பதற்கு இங்கே செல்லவும்...
பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I
பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க II

சூரியன் சார்பான பூமியின் சுற்றுப் பாதையானது ஒரு தளத்திலுள்ள நீள்வட்டப் பாதையாகும். ஏனைய அனைத்துக் கோள்களும் கிட்டத்தட்ட இதேமாதிரியான நீள்வட்டப் பாதையிலேயே உள்ளன. இராசி மண்டலத்திலுள்ள அனைத்து நட்சத்திரக் கூட்டங்களையும் கடந்து செல்வதற்கு பூமிக்கு 12 மாதங்கள் தேவைப்படுகின்றது.

பூமியின் சுழற்சிக் காலமானது ஒவ்வொரு 100 வருடங்களுக்கும் 0.0023 மணித்துளிகளால் (Sec) குறைவடைகின்றது. 900 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் நாளானது 18 மணித்தியாலங்கள் மட்டுமே நீண்டதாக இருந்தது. பூமியின் துணைக் கோளான சந்திரனின் சுற்றுப் பாதையானது ஒவ்வொரு வருடமும் 4 செ.மீ களால் அதிகரிக்கிறது.

பூமியை மையப்படுத்திய பண்டையகால மாதிரிகள்
சுமார் 6000 வருடங்களுக்கு முன் வானமண்டல ஆராய்ச்சி நிலையங்களை அமைக்கத் தொடங்கி நீண்ட கால வானியல் பதிவுகளை மேற்கொண்டனர். 12 இராசி மண்டலங்களிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களின், சூரியன் சார்பான அமைவுகளை வைத்து பருவகாலங்களை இலகுவாகக் கண்டறிந்தனர். மாதிரிகளை அமைப்பதை விடுத்து திரும்ப திரும்ப நிகழ்கின்ற உருவமைப்புக்களை (Repeating patterns) வைத்து எதிர்வுகூறல்களை மேற்கொண்டனர்.

சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி (Sun, Moon, Mercury, Venus, Mars, Jupiter and Saturn) போன்றவற்றின் சுற்றல்களைக் குறித்துக் கொண்டனர். செவ்வாய், வியாழன் மற்றும் சனி போன்றவை, குறித்த கால இடைவெளிகளில் வேகம் குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்வதை அவதானித்தனர்.

பண்டைய வானியலாளர்கள் பூமியே பிரபஞ்சத்தின் மையப்பகுதி எனவும் அது நிலையாக இருக்கிறது எனவும் நம்பினார்கள். எல்லா நட்சத்திரங்களும் விண்ணுலகில் (Celestial sphere) நிலையாக இருந்து கொண்டு நாளுக்கொரு முறை பூமியை சுற்றி வருகின்றன என்றும், சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்கள் சார்பாக மெதுவாக கிழக்கு நோக்கி நகர்வதாகவும் கருதினார்கள்.


கோள்களின் நகர்வு
நேரான நகர்வு: சூரியன் மற்றும் சந்திரன் போலவே வழமையாக கோள்களும் நட்சத்திரங்களின் பின்ணணியில் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இந்தக் கிழக்கு நோக்கிய போக்கு நேரான நகர்வு எனப்படுகிறது.

பின்நோக்கிய நகர்வு: ஆனாலும் கோள்கள் காலத்துக்குக் காலம் நிதானித்து பல வாரங்களோ மாதங்களோ மேற்கு நோக்கி நகர்கின்றன. பூமியில் இருந்து பார்க்கும்போது வெளிப்புறமாகவுள்ள கோள்கள் (Superior planets) நட்சத்திரங்கள் சார்பாக வழமையாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இருந்தபோதும், குறித்த கால இடைவெளிகளில் வேகம் குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து (கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மீண்டும் வேகம் குறைந்து பிரகாசம் மங்கி பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்கின்றன. இது பின்நோக்கிய நகர்வு (வக்ர கதியில் பயணித்தல்) (Retrograde motion) எனப்படுகிறது.

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2001

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2002

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2003

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2009-2010
அரிஸ்டோட்டில் Aristotle (384-322 BC)
பிரபஞ்சம் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது
1. பூரணத்துவமற்ற, மாற்றமடையக்கூடிய பூவுலகு
2. பூரணத்துவமுள்ள விண்ணுலகு
பூமியானது பிரபஞ்சத்தின் மையமெனவும் உருண்டையானது எனவும் அசைவற்று நிலையாக உள்ளதெனவும் முடிவுக்கு வந்தார். கோள்களின் நகர்வு பற்றி பூமியை மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார்.

தொலமி PTOLEMY (127-151 AD)
அரிஸ்டோட்டிலின் மாதிரியை பின்பற்றி பூமியை மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார். இது சுமார் 1500 வருடங்களாக அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மேலும் 1000 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலொன்றை அவற்றின் வானியல் ஆள்கூறுகள் மற்றும் பிரகாசம் பற்றிய தரவுகளுடன் உருவாக்கியிருந்தார்.

கோள்களின் சுற்றுப் பாதையின் மையமானது ஒரு வட்டப்பாதை வழியே நகர்கிறது (deferent).
அந்த மையப்புள்ளியைச் சுற்றி கோள்கள் ஒரு வட்டப் பாதையில் நகர்கின்றன (epicycle). இந்த வட்டப் பாதையின் மையமானது ஒரு புள்ளியிலிருந்து (equant) அவதானிக்கும்போது மாறா வேகத்துடன் பயணிக்கிறது.
இவை இரண்டுமே (epicycle and deferent) ஒரே மாதிரி இடஞ்சுழிப் போக்காகவே சுற்றுகின்றன.தொலமியின் மாதிரியில் பின்நோக்கிய நகர்வு (Retrograde motion): செவ்வாய், வியாழன் மற்றும் சனி
கோளானது தனது சுற்றுப் பாதையில் (epicycle) பூமிக்கு அண்மையாக வரும்போது அச்சுற்றுப் பாதையின் வழியேயான கோளின் இயக்கமானது சுற்றுப் பாதையின் மையத்தின் பூமி சார்பான சுற்றுப் பாதையிலான நகர்வு திசைக்கு எதிரானது. எனவே கோளானது பின்நோக்கி நகர்வதாகவே தோன்றும். (பார்க்க படங்கள் a,b & c)
தொலமியின் மாதிரியில் பிரத்தியட்சமான நகர்வு (Apparent motion): புதன் மற்றும் வெள்ளி
இந்தக் கோள்களின் சுற்றுப் பாதையின் (epicycle) மையமானது எப்பொழுதுமே பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான நேர்கோட்டிலேயே கிடக்கிறது. இதுனாலேயே கிழக்கில் சூரியனுக்கு பின்பாகவும் மேற்கில் சூரியனுக்கு முன்பாகவும் அவை புலனாகின்றன.

23 January 2009

இயற்கை ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறது...

எனக்குத் தெரியவில்லை... தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்...

22 January 2009

மரணத்தின் தேசம்

போரென்ற பேயொன்று பொங்கி எழுந்து வந்து
நாளும் பொழுதும் நரபலிகள் எடுப்பது
நாளை முடியுமென்ற நம்பிக்கையும் இல்லை

எட்டுத் திசைகளும் எதிரொலி எழுப்பும்
மரணித்து விழுபவர் மரண ஓலங்கள்
மறைந்து விடுமென்ற மயக்கமும் இல்லை

நாடிழந்து நகரிழந்து வீடிழந்து விதியென்று
காடுமிழந்து கடைசியாய் நாதியற்று நடுவீதியிலே
கொத்துக் கொத்தாக கோரமாய் கொலையுண்டு

பத்துப் பதினைந்தாய் நித்தமும் பலி கொடுத்து
வாழ்நாள் முழுவதும் வலியோடு வாழுகின்ற
தலைவிதியோ தமிழினமே தரணியிலே உனக்கு

முன்னொரு காலத்திலே மூத்த குடிகளாய்
தரணியிலே பரணிபாடி தலை நிமிர்ந்து வாழ்ந்தாலும்
இவைதான் இன்றெமது அடையாள சின்னமாய்

21 January 2009

பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க II

பிரபஞ்சம் பற்றிய முன்னைய பதிவுகளை பார்ப்பதற்கு இங்கே செல்லவும்...
பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I

தொலை நோக்கிகள் (Telescopes)
எப்பிடியான தொலை நோக்கிகளை (Telescopes) வானியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துறாங்க என்ற விடயத்தை இந்த இடத்தில பார்ப்போம்...

வானொலி அலை தொலைநோக்கிகள் (Radio Wave Telescopes)
எங்களால் வானொலி அலைகளைக் கேட்க முடியாது. ஆனால் வானொலிக் கருவிகள் மின்காந்தக் கதிர்வீச்சுக்களை (Electromagnetic Radiation) ஒலிச்சக்தியாக மாற்றக்கூடிய வல்லமை உடையவை என்பதால் எம்மால் அவற்றைச் செவிமடுக்க முடியும்.


உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி: Puerto Rico இல்
20 ஏக்கர் பரப்பளவில் 1000 அடிகள் குறுக்குவெட்டையும்
167 அடிகள் ஆழத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
வானொலி தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
பால் வீதி நட்சத்திரத் தொகுதி. அம்புக்குறி சுட்டிக்
காட்டுவது சுப்பநோவா (Supernova)
அகச்சிவப்பு தொலைநோக்கிகள் (Infrared Telescopes)
எமது உடல் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமாகவே உணர்ந்துகொள்கிறது.

ஹாவாயிலுள்ள (Hawaii) அகச்சிவப்பு தொலைநோக்கி

அகச்சிவப்பு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
வியாழனின் (Jupiter) மேற்பரப்பு
கட்புலனாகும் ஒளி தொலைநோக்கிகள் (Visible Light Telescopes)
பார்வையூடகமாக வளிமண்டலம் இல்லாத காரணத்தால் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்ட படங்கள் புவிமேற்பரப்பிலிருந்து பிடிக்கப்பட்டவற்றை விடத் தெளிவாக உள்ளன.

ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி: விண்வெளியில்
மிதந்து கொண்டிருக்கும் ஒளி தொலைநோக்கி

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies)
புறஊதா தொலைநோக்கிகள் (Ultraviolet Telescopes)
எமது வளிமண்டலம் புறஊதா கதிர்வீச்சுக்களை தடைசெய்வதனால் புறஊதா தொலைநோக்கி விண்வெளியிலேயே நிலைப்படுத்தப்பட வேண்டும்
விண்கலமொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
ஹொப்கின்ஸ் (Hopkins) புறஊதா தொலைநோக்கி


புறஊதா தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
சூரியனின் மேற்பரப்பிலுள்ள சுவாலைகள் (coronal loops)
X-கதிர் தொலைநோக்கிகள் (X-Ray Telescopes)

சந்ரா (Chandra) X-கதிர் தொலைநோக்கி

X-கதிர் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
கருந்துளை (black hole)
காமா கதிர் தொலைநோக்கிகள் (Gamma Ray Telescopes)
அணு வெடிப்புகளை/பிளவுகளை (Nuclear Explosions) போலவே நட்சத்திரங்களும் காமா கதிர்களை வெளிவிடுகின்றன.

Mt. Hopkins, அரிசோனாவிலுள்ள (Arizona) காமா கதிர் தொலைநோக்கி

காமா கதிர் தொலைநோக்கி மூலம் தொடராக படம் பிடிக்கப்பட்ட
நட்சத்திரமொன்றின் வெடிப்பு (sequence of an exploding star)