
இப்பொழுது இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. சிறுமி ஜன்னலூடாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மரங்களும் கட்டடங்களும் மிக வேகமாக பின்னோக்கி ஓடுவது அவளுக்கு வியப்பாய் இருந்தது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவளுக்குப் பசித்தது. தாயின் முகத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் கேட்கவில்லை. மெளனமாக இருந்தாள். அவளுக்குத் தெரியும், தன் பசியைப் போக்குவதற்கு தாயிடம் எதுவுமே இல்லையென்று. இருந்த சொற்பக் காசுக்கும் இரயில் டிக்கற் எடுத்துவிட்டார்கள்!
சிறிது நேரம் கழித்து முன்னால் இருந்த பெரியவர் தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தார். தான் கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து உணவுப் பொட்டலம் ஒன்றை எடுத்து தனக்கு அருகில் இருக்கையிலேயே வைத்து லாவகமாகப் பிரித்தார். சிறுமி இமை கொட்டாது பார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்தப் பொட்டலத்தில் நான்கு இட்லிகள் இருந்தன. அவளுக்குச் சந்தோசமாய் இருந்தது. அந்தப் பெரியவர் நிச்சயமாய் தனக்கும் ஒரு இட்லி தருவார்தானே!
பெரியவர் ஒரு இட்லியைக் கையில் எடுத்தார். சிறுமி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பெரியவர் மெதுவாக சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கினார். சிறுமியின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி குறையவில்லை. அவர் சாப்பிட்டு முடியும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள். பெரியவர் முதலாவது இட்லியை முடித்துவிட்டு இன்னுமொரு இட்லியை எடுத்தார். மீண்டும் சிறுமி ஆவலுடன் பார்த்தாள். இம்முறையும் பெரியவர் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார். மீண்டும் அவர் சாப்பிட்டு முடியும் வரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தாள் சிறுமி. மூன்றாவது இட்லியை எடுத்தார் பெரியவர். அதையும் சாப்பிடத் தொடங்கினார். இப்பொழுது சிறுமியின் முகத்தில் முன்பைவிட மகிழ்ச்சி பொங்கியது. இன்னும் ஒரேயொரு இட்லிதான். அது தனக்குத்தான். அவள் நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பெரியவர் மூன்றாவது இட்லியையும் முடித்துவிட்டு கடைசி இட்லியை எடுத்தார். சிறுமியின் கைகள் அதை வாங்குவதற்காக மெதுவாக உயர்ந்தன. பெரியவர் சாவகாசமாகச் சாப்பிடத் தொடங்கினார். உயர்ந்த கைகள் அப்படியே நின்றன. அவளுடைய பிஞ்சு முகம் இருண்டு போனது. அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தாள். அவளின் அடித்தொண்டையிலிருந்து முனகல் ஒன்று எழுந்து அப்படியே அமுங்கிப்போனது...
சாப்பிட்டு முடித்த பெரியவர் திருப்தியுடன் வயிற்றை தடவிவிட்டு பொட்டலம் கட்டி வந்த பேப்பரை கசக்கி ஜன்னலூடாக வெளியே எறிந்தார்...
பி.கு: இது நான் சிறு பையனாய் இருந்தபோது என்னுடைய அம்மா எனக்குச் சொன்ன கதை. சின்னவனாய் இருந்த என்னுடைய அடிமனதில் இது ஆழமாக பதிந்து விட்டது. இன்றும் நான் இரயிலிலோ பஸ்ஸிலோ பயணம் செய்ய நேரிட்டால் வண்டிக்குள் மற்றவர்கள் முன்னிலையில் உணவுப் பண்டங்களைத் தவிர்க்கவே செய்கிறேன். நண்பர்களுடன் சென்ற ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர... பயணம் செய்யும் போது சாப்பிடவே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. அது மற்றவர்களை பாதிக்காத வகையில் இருந்தால் நல்லது. உணவு விடுதிகளில் சாப்பிடுவதை (பயணத்தின் போதும் சரி) இதனுடன் ஒப்பிட முடியாது. இதைப் படிக்கும் ஓரிருவராவது இந்த நல்ல விடயத்தைப் பின்பற்ற குறைந்த பட்சம் முயற்சி செய்வார்களாயின் சிறப்பானதே...
9 comments:
Hi!! Your blog are very nice and more info. I hope follow my blog and please click my google ads.
அச்சச்சோ.....பெரியவருக்கு ரொம்ப பசி போல...
கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
அன்புடன் அருணா
நன்றி Megat மற்றும் அருணா...
இந்த மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கு....ஆனா எனக்கு இந்த மாதிரி எழுத வராது.
அருமை.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மனதை வருத்திய கதை. இக்கணத்தில் கூட எங்கேனும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவருக்கு! நல்ல பதிவு !
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார் மற்றும் ரிஷான் ஷெரீப்... உங்கள் பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன...
சிலர் முதிர்ச்சி வந்தும் மற்றவரகள் மனத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே.
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
நல்ல பதிவு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எம்.கே.முருகானந்தன் மற்றும் RVC...
//சிலர் முதிர்ச்சி வந்தும் மற்றவரகள் மனத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே//
சரியாகச் சொன்னீர்கள். மனிதம் மரணித்துப் போகக்கூடாது...
Post a Comment