09 January 2009

என்று வரும் வசந்தம் என் வாழ்வில் மீண்டும்

என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ
தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால்
உயிர்விட்டுப் போவதுபோல் வலியை உணர்கின்றேன்
என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு

என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து
ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை
மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில்
உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அழகான காலையிலே அவசரமாய் உணவுதேடி
பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள்
பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து
கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள்
பழுத்து மணம் வீசும் பக்கத்து பலா மரங்கள்
மனதுக்கு மகிழ்வு தரும் தோட்டத்து பூஞ்செடிகள்
வேலியோரமானாலும் நட்டுவைத்த பனைமரங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

காற்றுக்கு கதை சொல்லும் உயர்ந்த தென்னை மரம்
உச்சி வெயில் என்றாலும் குளிர்ச்சி தரும் வேப்ப மரம்
ஒல்லிக்குச்சி கிளையின் மீதே ஊஞ்சலாட புளிய மரம்
எக் காலம் என்றாலும் வற்றாத வாழை மரம்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள்
ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு
நிலத்தில் பாய் விரித்து நீண்டதொரு கதை சொல்லி
நிம்மதியாய் உறங்குகின்ற நிஜமான வாழ்க்கை
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர
மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு
அள்ளஅள்ள ஊற்றெடுக்கும் அகலமான கிணற்றுக்குள்ளே
பளிங்கு போல் ஜொலித்திடும் சுவையான தண்ணீர்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கச்சிதமாய் வரப்பு வெட்டி மொத்தமாய் விரித்துவிட்ட
பச்சைவண்ண கம்பளங்கள் பச்சைபசும் வயல்வெளிகள்
செடி நட்டு நீரூற்றி வெருளி கட்டி காவல் வைத்து
பக்குவமாய் பராமரித்த காய்கறி தோட்டங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

பாதையோரம் படர்ந்து பல வகை பூ பூத்து
விழி விரிய வைக்கும் அழகான பூங்கொடிகள்
ஆளில்லா வளவுக்குள் அதிசயமாய் வளர்ந்து
எச்சில் ஊற வைக்கும் இனிய கனி மரங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வரப்பு மேல் வழுக்காமல் வரிசையாய் வந்தமர்ந்து
வெட்டிக்கதை பல பேசி பறக்கவிட்ட பட்டங்கள்
நூலறுந்து போனதென்று வயலுக்குள் விழுந்தோடி
வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பி வந்த பொழுதுகள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

விளையாட்டாய் நினைத்து வித்தைகள் பல காட்டி
சுறுசுறுப்பாய் பாய்ந்து வரும் சுட்டி நாய்க்குட்டி
காலைச்சுற்றி வந்து தலை தூக்கி முகம் பார்த்து
கொஞ்சி விளையாடும் கொள்ளைகொள்ளும் பூனைகுட்டி
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கூட்டிலிருந்து தவறி குற்றுயிராய் விழுந்துவிட
பக்குவமாய் எடுத்து வந்து வெள்ளை துணி திரித்து
பாசத்துடன் பாலூட்டி வளர்த்த அணில்குஞ்சு
முட்டை இட்ட கூட்டுக்குள் எட்டிப்பார்த்த காக்கைகளை
தன்னை விட பலசாலி என்றெண்ணி கலங்காமல்
தைரியமாய் எதிர்த்த கரிக்குருவி சோடிகள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வளமான வாழ்க்கையை தொலைத்துவிட்டோம் நாங்கள்
பரதேசி போலவே அலைகின்றோம் தேசமெல்லாம்
என் இனியதேசமே என்று உன்னை காண்பேனோ
தெரியவில்லை எனக்கு ஆனாலும் ஒருநாள்
நிச்சயமாய் வருவேன் நிரந்தரமாய் உன்னிடம்
அன்றுதான் என் வாழ்வில் மீண்டும் வரும் வசந்தம்

No comments:

Post a Comment